×

குட்கா முறைகேடு புகாரில் சிக்கிய குடோன் சீலை அகற்ற கோரிய மனு தள்ளுபடி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சோழிங்கநல்லூர்: தமிழ்நாட்டில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2016ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யபட்ட குட்கா பொருள்கள் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த சர்ச்சையில் அப்போதைய அதிமுக அரசு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், ஒன்றிய அரசு அதிகாரிகள் பழனி, செந்தில்வேலவன் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர் இடம் பெற்றது. மேலும், 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் 2023ல் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனிடையே குட்கா பொருள்கள் வைத்திருந்தாக தன்னுடைய குடோன் சீல் வைக்கபட்டுள்ளதாகவும், வாடகைக்கு விட்ட குடோன் சீல் வைக்கப்பட்டுள்ளதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளாதவும், இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் என்னுடைய குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிட அதன் உரிமையாளர் சுமந்த் என்பவர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. மேலும், மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிட கோரிய சுமந்த் மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதி, வழக்கின் விசாரணை மே 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post குட்கா முறைகேடு புகாரில் சிக்கிய குடோன் சீலை அகற்ற கோரிய மனு தள்ளுபடி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Gudon ,Gutka ,Choshinganallur ,Tamil Nadu ,Senkunram ,Dinakaran ,
× RELATED கரூரில் நாய்கள் கடித்து மான் பலி